பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய தடகள வீரர்களை ஊக்குவிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். அந்த வகையில், அவர் பிரதமராக 3-ஆவது முறை பொறுப்பேற்றதும் 112 ஆவது முறையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா நான்கு தங்க பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றதை நினைவுகூர்ந்து, மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியானது, நமது மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடிப்பதற்கான வாய்ப்பை தந்திருப்பதாகவும், இந்திய வீரர்கள் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அஸ்ஸாமில் அஹோம் இன மக்கள் தங்களது மூதாதையர்களின் சடலத்தைப் பேணி காத்த சரைடியோ மைடம் நகரம் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இதன்மூலம் இந்தியாவிலிருந்து 43 பகுதிகளும், வடகிழக்கிலிருந்து முதலாவது பகுதியும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
கலாசாரத்தை பேணும் தேசம்தான் முன்னேறும் என்றும், இந்தியாவின் கலை வளத்துக்கு கலைஞர்கள் வலுசேர்க்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். போதைப்பொருளுக்கு எதிராக மத்திய அரசால் மனாஸ் மையம் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, மறுவாழ்வு பெற விரும்புபவர்கள் மனாஸ் மையத்தின் இலவச உதவி எண்ணான 1933-ஐ தொடர்புகொள்ளளாம் என கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசின் சிறப்பான திட்டங்களால் கதர் தொழிற்சாலையின் வருமானம் முதன்முறையாக ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை கடந்ததாகவும், இது 400 சதவீத உயர்வு என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.