பட்ஜெட்டில் கர்நாடகாவை மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறுவது தவறு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகவுக்கு மத்திய அரசு அளிக்கும் நிதி கணிசமான அளவில் உயர்ந்திருப்பதாகவும், கர்நாடக காங்கிரஸ் அரசு அதை மறுத்து போலி விளம்பரத்தை வெளியிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு சார்பில் 81 ஆயிரத்து 791 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டதாக கூறிய அவர், பாஜக ஆட்சியில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 818 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்தார். மேலும், கர்நாடகத்துக்கு மானியமாக மோடி அரசு கடந்த பத்தாண்டுகளில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 955 கோடி ரூபாய் அளிக்கப்பட்டதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.