திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், ஆண்டுதோறும் ஆசிரியப் பெருமக்கள் போராட்டம்தான் தொடர்கிறதே தவிர, அவர்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சென்னையில் இன்று, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்தல், அரசாணை 243ஐ கைவிடுதல், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதியான முறையில் போராட்டம் நடத்திய ஆசிரியப் பெருமக்கள் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 309, 311 ஆகியவற்றில், ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் வரப்படும் என்றும், இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்திருந்தது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், ஆண்டுதோறும் ஆசிரியப் பெருமக்கள் போராட்டம்தான் தொடர்கிறதே தவிர, அவர்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை.
மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.