இந்தியாவின் புகழ் பெற்ற ஹல்திராம் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை 40,000 கோடி ரூபாய்க்கு வாங்கும் நடவடிக்கையில் அமெரிக்க முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் ஈடுபட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவைப் பொறுத்தவரை ஹல்திராம் அனைத்து வீடுகளுக்கும் அறிமுகமான ஒரு பெயராகும். திருமணம், பிறந்தநாள், கிரக பிரவேசம், பண்டிகைகள் ,கொண்டாட்டங்கள் என அனைத்து சிறப்பு நிகழ்வுகளில் ஹல்திராம் இல்லாமல் இருக்காது. இதுவே ஹல்திராமின் வெற்றி.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சிறிய இனிப்புக் கடையாகத் தொடங்கிய ஹல்திராம், இன்றைக்கு ஆண்டுக்கு 9,000 கோடி ரூபாய் வர்த்தகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுடன் உலகமெங்கும் 3200க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் தன் சாம்ராஜ்யத்தை விரிந்திருக்கிறது ஹல்திராம்.
2022ம் ஆண்டு 5,195 கோடி ரூபாய் வருவாயையும் ,2023 ஆம் ஆண்டு 6,377 கோடி ரூபாய் வருவாயையும் ஹல்திராம் ஈட்டியுள்ளது. இப்படி ,ஆண்டுக்கு ஆண்டு ஹல்திராமின் வருவாய் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்தியாவின் 6.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள சிற்றுண்டி வர்த்தக சந்தையில் 13 சதவீத பங்கை ஹல்திராம் நிறுவனம் வைத்துள்ளது.
ஜெய்பிரகாஷ் வியாஸ் ,ஷஷி வியாஸ் ,அசோக் குமார் வியாஸ் மற்றும் விவேக் குமார் வியாஸ் ஆகிய நான்கு சகோதரர்களால் ஹல்திராம் நிறுவனம் நடத்தப் படுகிறது
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில், ஹல்திராமில் 51 சதவீத பங்குகளை வாங்க டாடா குழுமம் ஆர்வம் காட்டியது. இதற்காக 42,394 கோடி ரூபாய் என்ற தொகையைச் செலுத்த முன் வந்தது. ஆனால் ஹல்திராம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பை 83,300 கோடி ரூபாய் என நிர்ணயித்தனர். அதனால் , ஹல்திராமை கைப்பற்றும் திட்டத்தை டாடா நிறுவனம் கைவிட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிளாக் ஸ்டோன் நிறுவனம் , சிங்கப்பூரை சேர்ந்த டெமாசெக் நிறுவனம் மற்றும் பைன் கேப்பிடல் ஆகிய மூன்று நிறுவனங்களும் 69,158 கோடி ரூபாய்க்கு ஹல்திராமை வாங்க முன்வந்து விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்த விலைக்கும் ஹல்திராமை விற்க, அதன் உரிமையாளர்கள் விரும்பவில்லை. இதைவிடவும் அதிக தொகையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஏற்கெனவே கடந்த மே மாதம், ஹல்டிராமின் ஆரம்ப முன்மொழிவைத் தொடர்ந்து பிளாக் ஸ்டோன் நிறுவனம் புதிய ஏலத்தை வைக்காமல் பொறுமையாக காத்திருந்தது.
ஹல்திராம் நிறுவனத்தின் மதிப்பீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்போது, ஏலம் எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதாக பிளாக் ஸ்டோன் நிறுவனம் கூறியிருந்தது.
எதிர்பாராத திருப்பமாக இப்போது , ஹல்டிராமின் 51 சதவீத பங்குகளுக்கு சுமார் 40,000 கோடி ரூபாய் கொடுத்து பிளாக் ஸ்டோன் நிறுவனம் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஒப்பந்தம் மூலம் 70,000 கோடி முதல் 78,000 கோடி ரூபாய் வரை ஹல்திராமின் மதிப்பு இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது.
ஹல்திராம் உணவகங்களின் உரிமை மற்றும் பிராண்ட் உரிமம் போன்ற சில சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராண்ட் உரிமைகள் மற்றும் உணவகங்களின் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்காமல் இந்த ஒப்பந்தத்தை ஹல்திராம் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், தங்கள் பிராண்டை பயன்படுத்துவதற்கு பிளாக் ஸ்டோன் நிறுவனத்திடமிருந்து, ஆண்டுதோறும் ராயல்டியையும் ஹல்திராம் குடும்பத்தினர் பெறும் வகையில், இந்த விற்பனை விதிமுறை அமைக்கப்பட்டிருபப்தாகவும் கூறப் படுகிறது.
தொடர்ந்து விடாமுயற்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒரு வழியாக , ஹல்திராம் நிறுவனத்தை வாங்குவதில் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது அமெரிக்காவின் பிளாக் ஸ்டோன் நிறுவனம்.
சிற்றுண்டி வர்த்தகத்தில் முதலிடத்தில் இருக்கும் ஒரு இந்திய நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் கைப்பற்றி இருப்பது பலரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.