மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.
இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே 9 ஆயிரம் கோடி ரூபாயில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது. இதற்கு ஒப்புதல் தருமாறு மத்திய அரசிடம் கர்நாடகா கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் அனுமதி தரக்கூடாது என தமிழக அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்’ என வலியுறுத்தினார்.
அப்போது, “மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்’’ என பிரதமர் மோடி, டி.கே.சிவகுமாரிடம் அறிவுறுத்தியுள்ளார்.