வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டும் கேரள அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படைகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் கேரள எம்பி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் கேரள அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
கேரளாவுக்கு ஜுலை 23-ம் தேதியே 9 பேரிடர் மீட்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறிய அவர், மத்திய அரசின் பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகளுக்கு மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரத்தில் “அரசியல் எதுவும் இருக்கக்கூடாது” என்று கூறிய அமித்ஷா, “பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையிலான அமைப்பை உருவாக்குவதற்கு 2014 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு செலவழித்துள்ளது” எனவும் தெரிவித்தார்.