ஈரானின் 9-வது அதிபராக மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ஹமாஸ் அரசியல் குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, தலைநகர் டெஹ்ரானில் வைத்தே கொல்லப்பட்டிருக்கிறார். ஈரானுக்கு வந்த விருந்தினர் அந்நாட்டு மண்ணிலேயே கொல்லப்பட்டிருப்பது சர்வதேச அளவில் போர் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் ? என்பது தான் இப்போதைய கேள்வியாக உள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
காசா நகருக்கு உள்ளேயும் வெளியேயும் ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து அழிப்பதே இஸ்ரேலின் உறுதியான கொள்கை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி இருந்தார்.
மேலும், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அதிக விலையை ஹிஸ்புல்லா கொடுக்க வேண்டும் என்றுமு் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் தான் , ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் குழுத் தலைவர் 62 வயதான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டிருக்கிறார். ஈரானில் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின் தமது இல்லத்தில் ஹனியே தங்கியிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ள நிலையில், இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது ஒரு கோழைத்தனமான செயல் என்றும் ஆபத்தான வளர்ச்சி என்றும் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதில் பாலஸ்தீனியர்கள் ஒன்றிணைந்து பொறுமையாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இஸ்ரேலுக்கு ‘கடுமையான தண்டனை’ வழங்கப்படும் என ஈரானின் முதன்மை தலைவர் அயதுல்லா அலி கமேனி உறுதியளித்திருக்கும் நிலையில், ஈரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ஈரான் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு பெருமைமிக்க நாடுகளுக்கிடையேயான பிணைப்பு முன்பை விட வலுவாக இருக்கும் என்றும், இந்த கோழைத்தனமான செயலுக்கு அவர்கள் வருந்துவார்கள் என்றும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் , இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று இஸ்ரேல் மறுத்துள்ளது.
துருக்கி,சீனா,ரஷ்யா,கத்தார்,ஜோர்டான், ஐரோப்பிய யூனியன் உட்பட பல நாட்டு தலைவர்களும் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராணுவத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், இஸ்ரேல் தாக்கப்பட்டால் அதை அமெரிக்கா பாதுகாக்கும் என்றும், மத்திய கிழக்கில் ஒரு பரந்த போர் தவிர்க்க முடியாதது என்று தாம் நினைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் காசா மீது இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் 39,445 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மற்றும் 91,073 க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கடந்த அக்டோபரில் இருந்து இஸ்மாயில் ஹனியே குடும்ப உறுப்பினர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம், காசாவின் ஷாதி முகாமில் நடத்தப்பட்ட கார் மீதான தாக்குதலில் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள், நான்கு பேரக்குழந்தைகள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் கொல்லப்பட்டனர்.
சில மாதங்களுக்கு முன்பு சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான தாக்குதல் நடத்தியது.
இப்போது , ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் மண்ணில் கொல்லப் பட்டிருக்கிறார். ஈரான் பதிலுக்கு தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தெரியும்.
ஏற்கெனவே , ரஷ்யா-உக்ரைன் போர் , சீன-தைவான் போர் பதற்றம் , சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி உட்பட பல நெருக்கடிகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.
ஹமாஸ் உடன் போர், ஹிஸ்புல்லாவுடன் போர் என இராணுவ நடவடிக்கை எடுத்த இஸ்ரேல் இப்போது ஈரான் என்னும் தேன் கூட்டைத் தொட்டிருக்கிறது.
என்ன நடக்குமோ என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது. கூடவே கற்பனை செய்து பார்க்க முடியாத பயங்கரமும் இருக்கிறது என்று கூறுகிறார்கள் புவிசார் அரசியல் பார்வையாளர்கள்.