சீனாவிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது பற்றி அரசு மறுபரிசீலனை ஏதும் செய்யவில்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் என்ன? பின்னணி என்ன? என்பது பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான ஆனந்த நாகேஸ்வரன், சில தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதிகளைச் சீனாவில் இருந்து முதலீடு செய்வதன் மூலம் இந்தியா அதிக லாபம் ஈட்டலாம் என்றும், இந்திய உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உலக விநியோகச் சங்கிலியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தவும் இது உதவும் என்றும் கூறியிருந்தார்.
முன்னதாக, கடந்த வாரம் மத்திய நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், சமர்ப்பிக்கப் பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், சீன இறக்குமதியை கட்டுப்படுத்தும் விதிகள் பயனற்றவை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சீனாவின் முதலீடுகள் மேற்கத்திய நாடுகளின் ஏற்றுமதி சந்தைகளில் இந்தியா முதன்மை பெறுவதற்கு உதவும் என்றும் அந்த அறிக்கையில் கூறப் பட்டிருந்தது.
சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சீனாவில் இருந்து வரும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கும் இடையே சமநிலையை இந்தியா கண்டறிய வேண்டும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை அரசுக்கு ஆலோசனை செய்திருந்தது.
இந்தப் பின்னணியில், பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது என்றும், சீனாவிடமிருந்து அன்னிய நேரடி முதலீட்டை பெறுவது குறித்து அரசு மறுபரிசீலனை செய்யவில்லை என்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
கொரொனா தொற்றுநோய் பரவல் இருந்த காலக் கட்டத்தில் , பல நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து இருந்தன. பல்வேறு பொருளாதார நிபுணர்களும் பெரும் தொழில் நிறுவனங்களும் மத்திய அரசுக்கு கொரொனாவால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தன.
அவற்றை கருத்தில் கொண்டு, இந்திய அரசு ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி, இந்திய எல்லையை ஒட்டியுள்ள நாடுகளை சேர்ந்த நிறுவனங்களோ, குடிமக்களோ இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்ய மத்திய அரசின் முன்னனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப் பட்டது.
சீனாவைத் தவிர ஆப்கானிஸ்தான் ,நேபாளம், மியான்மர் பூடான் ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியாக இந்தியாவில் மிக குறைந்த முதலீடு மட்டுமே செய்துள்ளன.
இந்தியாவில் மிக அதிகமாக அந்நிய நேரடி முதலீடு செய்த நாடுகளில் ஒன்றாக சீனா இருந்து வருகிறது. 2019-ம் ஆண்டு நிலவரப் படி , இந்தியாவில் சீனாவின் அந்நிய நேரடி முதலீடு 14,800 கோடி ரூபாய் ஆகும்.
இந்த சட்டத் திருத்தம் வந்தபிறகு , சீன டிக்டாக் ,பப்ஜி போன்ற 220 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப் பட்டன.
2020ம் ஆண்டு கல்வான் எல்லைப்பகுதியில் நடந்த ராணுவ மோதலைத் தொடர்ந்து , இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் கணிசமாக குறைந்தன.
இந்நிலையில் கடந்த ஜனவரியில் MG மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 38 சதவீத பங்குகளை சீனாவின் JSW குழுமம் வாங்குவதற்கு இந்திய போட்டி ஆணையம் (CCI) அனுமதி வழங்கி இருக்கிறது.
அந்நிய முதலீடுகள் குறைந்த நிலையிலும், இந்தியா- சீனா வர்த்தக உறவுகள் அதிகரித்துள்ளது என்று மத்திய வர்த்தக துறை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
2023-24 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா 118.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இருவழி வர்த்தகத்துக்கு துணை புரிந்துள்ளது.
முன்னதாக, கடந்த நிதியாண்டில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 8.7 சதவீதம் அதிகரித்து 16.67 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. குறிப்பாக, இரும்புத் தாது, பருத்தி நூல்,துணிகள், தயாரிப்புகள், கைத்தறி, மசாலாப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பிளாஸ்டிக் ஆகிய பொருட்கள் சீனாவுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சீனாவிலிருந்து இறக்குமதி 3.24 சதவீதம் அதிகரித்து 101.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 2022-23ல் 83.2 பில்லியனாக இருந்த வர்த்தக பற்றாக்குறை கடந்த நிதியாண்டில் 85 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2013-14 முதல் 2017-18 வரையிலும், 2020-21 வரையிலும் இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளியாக சீனா இருந்தது என்றும், 2021-22 மற்றும் 2022-23 இல் அமெரிக்கா மிகப்பெரிய பங்காளியாக இருந்தது என்றும் தெரிய வருகிறது.
சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தி , அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இப்போது இந்திய PLI திட்டத்தின் மூலம் உள்ளூர் உற்பத்தியை வளர்த்து வருகிறது. அதற்கான உள்கட்டமைப்புக்களையும் உருவாக்கி வருகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தின் வெற்றிக்கு ஆதாரமாக இருக்கும் லித்தியம் சுரங்கத்தையும் இந்தியா தேட தொடங்கி இருக்கிறது.
இதன் தொடக்கமாக, அயல் நாட்டு நிறுவனங்களுக்கான வரியை 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக மத்திய அரசு குறைந்திருக்கிறது.
இதனால் இந்திய சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்களுக்கு அந்நிய முதலீடுகள் கிடைப்பதோடு, உள்ளூர் உற்பத்தியில் இந்தியா வேகமாக முன்னேறும் வாய்ப்பு எளிதாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையுடன் (DPIIT) இந்தியாவுக்கு வரும் சீன முதலீடுகளை மறுஆய்வு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
சீன முதலீடுகளை அனுமதிக்கக்கூடிய பொருட்களின் பட்டியலை உருவாக்கும் முன், பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதால் ஏற்படும் பாதுகாப்பு அபாயத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து வர்த்தக துறை முடிவு செய்யும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாறிவரும் புவிசார்அரசியலுக்கு மத்தியில் சீனாவுடனான வர்த்தகத்தை சீராக வளர்க்கும் விதத்தில் உலகளாவிய மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது.
சீனா பிளஸ் ஒன் திட்டத்தின் வழி அதிக பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தாலும், இந்தியாவில் சீன அன்னிய நேரடி முதலீடு தொடர்பான அபாயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.