விளிம்பு நிலை மக்களுக்கான வாக்குறுதியை காப்பாற்றிய சமூக நீதி காவலர் பிரதமர் மோடி என உள்ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும்,
அதற்கான வரையறை செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
இதன் மூலம், தமிழகத்தில் அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விளிம்பு நிலையில் உள்ள அருந்ததியர் சமூக மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பல ஆண்டு காலம் போராடி பெற்ற உள் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதை பெரும் உவகையுடன் வரவேற்பதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையின்போது, பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவில், மாநிலங்கள் துணை வகைப்படுத்துவதற்கு ஆதரவாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும்,
இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பிரதமர் மோடி ஓபிசி பட்டியலை உருவாக்கும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்கியதால், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்ய முடிகிறதாகவும் கூறியுள்ள எல்.முருகன்,
விளிம்பு நிலை மக்களின் சமூக நீதிக்காவலர் பிரதமர் மோடிக்கு தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.