இளநிலை நீட் மறு தேர்வுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து, நீட் மறுதேர்வு நடத்த கோரி, உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்வின் புனிதத்தன்மை மீறப்பட்டதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறிய நீதிபதிகள், நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும், நீட் பிரச்னைக்கு நிகழாண்டிலேயே மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு அளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் விவகாரத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பித்ததும் அதை துரிதமாக நடைமுறைப்படுத்துவோம் என உறுதியளித்துள்ளார்.