தேர்தல் நிதி பத்திர விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், தேர்தல் நிதி பத்திரத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கியில் தேர்தல் நிதி பத்திரத்தை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைதாரர்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் நிதி பத்திரங்கள், வாக்காளர்களின் வெளிப்படைத் தன்மையை மீறுவதாக கூறி, அத்திட்டத்தை ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் சட்டத்துக்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும் என்றும், இந்த தருணத்தில் உத்தரவு ஏதும் பிறப்பிக்க இயலாது என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.