தொடர் சர்ச்சைகளில் சிக்கியுள்ள முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியான பூஜா கேத்கரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எந்நேரமும் பூஜா கேத்கர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் துபாய்க்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மகாராஷ்டிராவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் பூஜா கேத்கர். இவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று 2022ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்ட உதவி ஆட்சியராக இருந்தபோது பூஜா கேத்கர், சொந்த ஆடி காரில் சைரன் பயன்படுத்தியதாகவும், மகாராஷ்டிர அரசு என ஸ்டிக்கரும் ஒட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் பயிற்சி ஐஏஎஸ் ஆக இருந்தாலும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான சலுகைகளான , தனி அலுவலகம், கூடுதல் காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஏகட்டதாகவும் புகார்கள் வந்தன .
இதனையடுத்து, பூஜா கேத்கர் வாஷிம் பகுதிக்குப் பணி மாறுதல் வழங்கப் பட்டது. அதே நேரத்தில் பூஜா கேத்கர் செய்திருந்த இன்னொரு மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
பூஜா கேத்கர், தன்னை பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓபிசி பிரிவு சேர்ந்தவராக சான்றிதழ் கொடுத்தும், தனக்கு பார்வை மற்றும் மனஇறுக்க பிரச்சனை உள்ளதாகவும் தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் IAS பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பூஜா கேத்கர் ஐஏஎஸ் பயிற்சியில் இருந்து நீக்கப் பட்டார். இதுதொடர்பாக மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் கூடுதல் செயலாளர் மனோஜ் திவிவேதி தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப் பட்டது.
பூஜா கேத்கர் மீதான புகார்கள் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 25ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி பூஜா கேத்கருக்கு யுபிஎஸ்சி சார்பில் கடிதம் அனுப்பட்டது. என்றாலும் பூஜா கேத்கரின் கோரிக்கையை ஏற்று காலஅவகாசம் என்பது மேலும் 5 நாட்கள் வரை நீட்டிக்கப் பட்டது. ஆனாலும் பூஜா கேத்கர் தம் தரப்பு விளக்கத்தை அளிக்கவில்லை
இதற்கிடையே பூஜா கேத்கர் பற்றிய விசாரணையில் மேலும் ஒரு திடுக்கிடும் மோசடி வெளியானது. தேர்வு விதிகளில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக முறை பூஜா கேத்கர் யுபிஎஸ்சி தேர்வில் பங்குபெற்றுள்ளார். இதற்காக, தனது அடையாளங்களை மறைத்து யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ்ஸாக தேர்வானதும் விசாரணையில் தெரிய வந்தது.
உடனடியாக பூஜா கேத்கரின் தேர்வு மற்றும் ஐஏஎஸ் பணிக்கு அவர் தேர்வானதை அதிரடியாக யுபிஎஸ்சி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் அவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதவும் யுபிஎஸ்சி தடை விதித்துள்ளது.
மேலும் மேலும் பல மோசடி வழக்களில் சிக்கியதால் பூஜா கேத்கர் , டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். பூஜா கேத்கருக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் நீதிபதி தேவேந்தர் குமார் ஜங்காலா, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்த யாராவது பூஜா கேத்கருக்கு உதவி செய்தார்களா என்றும் டெல்லி காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், பூஜா கேத்கர் போல் ஓபிசி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் வேறு யார் எல்லாம் உரிமையின்றி சலுகைகளைப் பெற்றுள்ளனர் என்று விசாரிக்குமாறும் டெல்லி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தான், பூஜா கேத்கரின் கைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இதனால் கைதுக்கு பயந்து பூஜா கேத்கர் துபாய்க்குத் தப்பித்து சென்றிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.