ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சந்து ஆகியோர் வரும் 8 முதல் 10-ஆம் தேதி வரை அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர், ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிந்தன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைக்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையொட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் வரும் 8 முதல் 10-ஆம் தேதி வரை ஸ்ரீநகர் சென்று, உள்ளூர் அதிகாரிகளை சந்தித்து தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், வரும் 10-ஆம் தேதி ஜம்முவில் செய்தியாளர்களை தேர்தல் ஆணையர்கள் சந்திக்க உள்ளனர்.