வயநாட்டு நிலச்சரிவில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து பொருட்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், வயநாட்டு நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஏராளமான வீடுகள், ரிசார்ட்டுகளை விட்டு பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த பேரிடரின் நெருக்கடிக்கு மத்தியில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பொதுமக்கள் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இது குறித்து பதிலளித்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபடுவது போல அத்துமீறி நுழையும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களிலும் போலீசாரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.