இந்திய மக்கள்தொகையில் வெறும் 2 சதவீதம் மட்டுமே உள்ள ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களே 30 சதவீத ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
அவர்களால் மட்டும் எப்படி சாதிக்க முடிகிறது ? ஹரியானாவில் மட்டும் எப்படி இத்தனை ஒலிம்பிக் சாதனையாளர்களை உருவாக்க முடிகிறது? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
1900ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் இதுவரை 38க்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
குறிப்பாக, ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் தனிநபர் பதக்கங்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விவசாயம் மட்டுமே பிரதானமாக இருக்கும் ஹரியானா, இந்தியாவின் தடகள மையமாகவே திகழ்கிறது.
ஹரியானாவின் சோனேபட் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவி குமார் தஹியா மற்றும் யோகேஷ்வர் தத் ஆகியோரை உருவாக்கி, சாம்பியன் மல்யுத்த வீரர்களை உருவாக்குவதில் பிரபலமானது.
2020ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்ற 126 பேர் கொண்ட இந்திய குழுவில் ஹரியானாவில் இருந்து 31 பேரும், பஞ்சாபில் இருந்து 19 பேரும் இடம் பெற்றிருந்தனர்.
2020ம் ஆண்டு இந்தியாவின் ஒலிம்பிக் பொற்காலம் என்றால் மிகையில்லை. அதில், இந்தியாவுக்காக தனிநபர் பதக்கம் வரிசையில் தடகளத்தில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மல்யுத்தத்தில் வெள்ளி வென்ற ரவிகுமார் தஹியா மற்றும் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா ஆகிய மூன்று பேரும் ஹரியானாவின் கிராமங்களில் இருந்து வந்தவர்கள். மேலும், வெண்கலம் வென்ற ஆண்கள் ஹாக்கி அணியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு தனிநபர் வீரர்கள் இருந்தனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் 23 தனிப்பட்ட பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். அவற்றில் ஹரியானாவைச் சேர்ந்த ஏழு வீரர்கள் 7 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை புரிந்தனர்.
துப்பாக்கி சுடுதல், ஈட்டி எறிதல், மல்யுத்தம், குத்துச் சண்டை, வில் விளையாட்டு, ஹாக்கி , கோல்ஃப் என குறிப்பிட்ட இந்த விளையாட்டுக்களில் ஹரியானாவில் இருந்து மட்டும் ஒலிம்பிக் வீரர்கள் வந்த சாதனை செய்வதற்கான காரணங்கள் பல இருக்கின்றன.
ஹரியானா எல்லையில் அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக தொடர்ச்சியான ஆக்கிரமிப்பால் ஒரு கொந்தளிப்பான வரலாற்றைக் கொண்ட மாநிலமாக உள்ளது. எனவே, அந்த மாநில மக்களுக்கு இயல்பாகவே தனித்துவமான தற்காப்புப் பண்புகளான உடல் வலிமை மற்றும் விடாமுயற்சி அதிகமாக உள்ளது.
பெரும்பாலும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் ஹரியானா இளைஞர்கள், விவசாயம் மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் தான் அதிக நேரங்களை செலவிடுகிறார்கள்.
குறிப்பாக, ஹரியானா மாநில கிராமங்களில் மல்யுத்தம் காலங்காலமாக ஒரு பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது. ஹரியானாவில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் அதற்கான பயிற்சி கூடங்கள் உள்ளன. அந்த பயிற்சிக் கூடங்களில் சிறுவர், சிறுமிகள் மண் குழியில் பயிற்சி செய்கிறார்கள். மேலும் கிராமப்புற ஹரியானாவில், மல்யுத்தம் உடற்பயிற்சிக்கான ஒரு நல்ல விளையாட்டாகக் கருதப்படுகிறது.
ஹரியானாவின் மிகப்பெரிய மாவட்டமான பிவானி, மினி கியூபா என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் விஜேந்தர் சிங், விகாஸ் யாதவ் போன்ற சில தரமான குத்துச்சண்டை வீரர்கள் இந்த மாவட்டத்தில் இருந்து தான் வந்துள்ளனர். பிவானியில், கிட்டத்தட்ட அனைத்து சிறுவர்களுக்கும் குத்துச் சண்டை விளையாட தெரியும் என்பது ஆச்சரியமான உண்மை.
இந்திய அரசு மட்டுமல்லாமல் , ஹரியானா மாநில அரசும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு முறையே ரூ. 4 கோடி ரூபாயும் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 2.5 கோடி ரூபாயும் ரொக்கப் பரிசாக வழங்கியது. மேலும் அரசு சார்பில் சலுகை விலையில் வீடுகள் வழங்கியுள்ளது. மேலும், மாநில அரசு பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப் படுகிறது.
மேலும் இந்தியாவின் ஒரே தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
நவீன வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் இன்னும் எட்டி பார்க்காத, ஹரியானாவில் உள்ள பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் தான் வாழ்கின்றனர்.
அரிசியை விட மாவில் பத்து மடங்கு ஆற்றல் உள்ளதாகவும் மாவை விட பாலில் பத்து மடங்கு அதிக ஆற்றல் உள்ளதாகவும் பாலை விட இறைச்சியில் எட்டு மடங்கு அதிகம் ஆற்றல் உள்ளதாகவும் மற்றும் இறைச்சியை விட நெய்யில் பத்து மடங்கு அதிக ஆற்றல் உள்ளதாகவும் அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியன் சொன்னதை ஹரியானா மக்கள் கடைப்பிடிக்கிறார்கள் .
புரத சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளையே ஹரியானா மக்கள் சாப்பிடுகிறார்கள். குறிப்பாக நிறைய தயிர், நெய் மற்றும் பால் சாப்பிடுகிறார்கள். வலுவான உடலமைப்புடன் ஒருவர் தடகளத்தில் பயிற்சி பெற்றிருந்தால், எந்த விளையாட்டிலும் சிறந்து விளங்குவது எளிதாகும்.
2024 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சென்ற 117 இந்திய வீரர்களில் 24 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.