மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை சூழலோடு அமைந்துள்ள மரக்கட்டைகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள வீடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிமெண்ட் வீட்டிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள மர வீடு பாதுகாப்பானதா? உறுதியானதா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ளது பரம்பு என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவசுப்பிரமணியன், இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், ஊருக்கு அருகே தனது நிலத்தில் புதிய வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். இந்த வீடு வழக்கம் போல் சிமெண்ட், செங்கல், மணல், கற்கள் போன்றவற்றை பயன்படுத்தி கட்டாமல், முழுக்க முழுக்க இயற்கை சார்ந்ததாக இருக்க வேண்டும் என எண்ணியுள்ளார் சிவசுப்பிரமணியன்.
மேலும், தனது ஆசையை மரச்சிற்ப கலை படித்துள்ள தனது நண்பரிடமும், சிற்பக்கலை நிபுணருமான சோமசுந்தரத்திடமும் கூறியுள்ளார். இருவரும் ஊக்கப்படுத்தியதால், கடந்த 2021ஆம் ஆண்டு வீடு கட்டும் பணியை சிவசுப்பிரமணியன் தொடங்கியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அடித்தளம் மட்டும் கற்கள், சிமெண்ட், மணல் கலவையைக் கொண்டு கட்டியுள்ளார். பிறகு வீட்டின் சுவர்கள் அனைத்தும் வேம்பு கட்டையாலும், சீலிங் பகுதி முழுக்க தேக்கு கட்டையாலும் கட்டியுள்ளார். மர சிற்பக் கலையில் கைத்தேர்ந்த கலைஞரான சோமசுந்தரம், தான் அமைக்கும் முதல் மரக்கட்டை வீடு என்பதால் பார்த்து பார்த்து மிக நேர்த்தியாக வீட்டை கட்டியுள்ளார்.
மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மரக்கட்டைகளுக்கு இடையே வாட்டர் ப்ரூப் பேஸ்ட் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், கூடுதல் பாதுகாப்புக்காக வீட்டின் சீலிங் பகுதிக்கு மேல் மண் ஓடும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் உறுதித்தன்மைக்காக நான்கு பக்கமும் அதிகபட்சம் 5 இஞ்ச் கனம் கொண்ட மரக்கட்டைகளால் தூண் அமைக்கப்பட்டுள்ளது. 600 சதுர அடியில் மரக்கட்டையால் வீடு கட்ட 15 லட்சம் முதல் 16 லட்சம் வரை செலவாகும் என்றும், அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் வீட்டை கட்டி முடித்து விடலாம் என்கிறார் சோமசுந்தரம்.
தற்போது வீட்டின் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், அடுத்த மாதம் கிரகப்பிரவேசம் செய்ய உள்ளதாகவும் கூறும் சிவசுப்ரமணியன், மரக்கட்டையால் கட்டப்பட்ட வீட்டை ஊர் மக்கள் முதலில் வேடிக்கையாக பார்த்ததாகவும், தற்போது அவர்களே வியப்போடு பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை சூழலோடு அமைந்துள்ள வித்தியாசமான முறையில் மரக்கட்டைகளால் அமைக்கப்பட்டுள்ள வீடு பார்ப்போரை கவர்ந்துள்ளது. அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் சிமெண்ட் வீட்டை புறக்கணித்து, அதற்கு இணையான மரக்கட்டையினாலான வீட்டை கட்டமைத்துள்ள சிவசுப்பிரமணியனின் இயற்கை மீதான ஆர்வத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.