பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதி போட்டியில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கடுமையாக போராடியும் பலனளிக்கவில்லை என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், வினேஷ் போகத்துக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தேசமும் நிற்பதாக தெரிவித்தார். மேலும் வினேஷ் போகத்தை சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன் என பிரதமர் மோடி குறிப்பிட்டத்தை சுட்டிக்காட்டிய ஜெ.பி.நட்டா, இதன்மூலம் 140 கோடி மக்களின் குரலை அவர் பிரதிபலித்ததாக தெரிவித்தார்.
மாநிலங்களவையில் எழுப்புவதற்கு வேறு பிரச்னை இல்லாததால், வினேஷ் போகத் தகுதிநீக்க விவகாரத்தை எதிர்க்கட்சியினர் கையில் எடுப்பதாகவும், அவரது தகுதிநீக்கத்தை எதிர்த்து மத்திய அரசும், விளையாட்டு அமைச்சகமும், இந்திய ஒலிம்பிக் சம்மேளனமும் எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா வேதனை தெரிவித்தார்.
இருப்பினும் அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சியினரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், வினேஷ் போகத்துக்காக தாங்கள் மட்டும்தான் வருந்துவது போன்ற தோற்றத்தை எதிர்க்கட்சியினர் கட்டமைக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.