கிரீமிலேயர் விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பாஜக எஸ்சி, எஸ்டி பிரிவு எம்.பி.க்கள் சந்தித்து மனு அளித்தனர்.
எஸ்சி, எஸ்டி மற்றும் பழங்குடியினருக்கான உள் இடஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
அதேவேளையில், உள் இடஒதுக்கீட்டின்போது பொருளாதார அளவு கோலான கிரீமிலேயர் முறையை கவனத்தில் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த எஸ்சி, எஸ்டி பிரிவு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, இதுகுறித்து பரிசீலிப்பதாக தங்களிடம் கூறியதாக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.