யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து போதைப் பொருள் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் திருச்சி, கோவை மற்றும் சென்னை என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சவுக்கு சங்கரின் தாயார் கமலா வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணியம், சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்ததில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது எனவும் சமூக ஊடகங்களை அரசு முடக்க நினைக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கரை கைது செய்த நடவடிக்கையை ரத்து செய்த நீதிபதிகள், சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் எனவும் கூறினர்.