திருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
திருச்சி பாரதியார் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்துவந்த மாணவனுக்கு இதயம் தொடர்பான பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மதிய இடைவேளையின்போது வகுப்புக்குள் அமர்ந்திருந்த சிறுவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
மற்ற மாணவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வகுப்புக்கு வந்த ஆசிரியர் மாணவன் மயங்கி விழுந்திருப்பதைக் கண்டார். இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதையடுத்து சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ற்படுத்தியுள்ள நிலையில் அனைத்து பெற்றோரையும் அழைத்து பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது மாணவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது வகுப்பில் ஏன் ஆசிரியர்கள் இல்லை என பெற்றோர் சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.