நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு பிரதமர் மோடி செல்வதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அங்கு மீட்பு பணி துரிதமாக நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், மீட்பு பணிகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி வயநாடு செல்வதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி, டெல்லியிலிருந்து விமானத்தில் முற்பகல் 11 மணிக்கு கண்ணூர் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு வயநாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்கிறார். பின்னர், நண்பகல் 12.15 மணிக்கு அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணி நிலவரத்தை பிரதமர் மோடி கேட்டறிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.