பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், எளிமையான பின்னணி கொண்ட பாகிஸ்தானின் அர்சாத் நதீம் தங்கம் வென்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவே காத்திருந்த தங்க மகன் நீரஜ் சோப்ராவின் தங்க வேட்டைக்கான நேரம் அது. இந்திய நேரப்படி இரவு 11.55 மணிக்கு தொடங்கிய போட்டியை பல கோடி மக்கள் கடைக் கோடியில் இருந்து நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கடந்த ஆண்டு புடாபெஸ்ட்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 88.17 மீட்டர் தூரம் வீசி நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அதே போல் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் 88.88 மீட்டர் தூரம் வீசி அற்புதமான சாதனையை நிகழ்த்தி அதிலும் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா…
நீரஜ் சோப்ராவின் இந்த அபரிமிதமான திறனுக்கு ஈடுகொடுக்க எவரும் இல்லை என ஒட்டுமொத்த இந்தியாவே, அவர் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்றது போல, இந்த ஒலிம்பிக் தொடரிலும் தங்கம் வெல்வார் என்ற ஆவலுடன் இருந்த போது தான், உள்ளே நுழைகிறார் பாகிஸ்தான் வீரர் அர்சாத் நதீம்… அர்சாத் நதீம் கடந்தாண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரிலேயே நீரஜ் சோப்ராவுக்கு டஃப் கொடுத்திருந்தார் என எல்லோருக்கும் தெரியும்.. இருப்பினும் பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர் மீதான கவனத்தை கண்டு கொள்ளாதவர்கள்களுக்கு எல்லாம், 10 நொடிகளில் அதிர்ச்சியை கொடுத்து அசாத்திய சாதனையினை புரிந்தார் நதீம்…
ஆம் தனது முதல் வாய்ப்பை பவுல் ஆக்கிய அர்சாத் நதீம், தனது இரண்டாவது வாய்ப்பை தங்கத்திற்கான இலக்கிற்கு வீசவே, நெடுந்தூரம் சென்ற அவரது ஈட்டி 92.97 மீட்டர் தூரத்தில் குத்தியது. அங்கேயே தங்கத்தை உறுதி செய்த அர்சாத் நதீம் மற்ற வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தது மட்டுமல்லாமல், புதிய ஒலிம்பிக் சாதனையும் படைத்தார்… இது நீரஜ் சோப்ரா உள்ளிட்ட மற்ற வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே, தனது 6 முயற்சிகளில் 5 முயற்சிகளை பவுல் ஆக்கி, 1 முயற்சியில் 89.45 மீட்டராக தனது இலக்கை பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை உறுதிப்படுத்தினார் நீரஜ் சோப்ரா…
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரிலேயே பெரும் கவனம் பெற்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அர்சாத் நதீம், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நாயகனாக மாறி, 1992 க்கு பிறகு பாகிஸ்தானுக்காக ஒரே பதக்கம், அதுவும் தங்கப் பதக்கத்தை பெற்று கொடுத்திருக்கிறார்… உழைப்பு இல்லாமல் பெருமைகள் தேடி வராது என்பதற்கு உதாரணமாக, அர்சாத் நதீம் வாழ்க்கை அமைந்திருக்கிறது. அர்சாத்தின் தந்தை ஒரு கட்டிடத் தொழிலாளி. அர்சாத் ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடுவதை கூட அவரது தந்தை சொல்லும் போது ‘ எனது மகன் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ளார், அவை உலகின் மிகப்பெரிய விளையாட்டுகள் என கூறுகிறார்கள். அவர் பதக்கம் வென்றால் பாகிஸ்தான் மிகுந்த சந்தோஷம் கொள்ளும்” என்று பேசியுள்ளார்.
தினசரி 300-400 ரூபாய் கூலிக்கு வேலை பார்த்து கிடைக்கும் பணத்தை வைத்து வீட்டில் 9 பேரை கவனித்து வரும் நிலையில் அர்சாத்துக்கும், அவரது உடன்பிறப்புகளுக்கும் பால், நெய் கிடைப்பதை நிறுத்தவில்லை என அவரது மாமா உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் அர்சாத்தின் விளையாட்டு பயணங்களுக்காக அவரது கிராமமான மியான் சன்னு மக்கள் அனைவரும் நன்கொடை கொடுத்து அனுப்புவார்களாம்…
பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள கானேவால் கிராமத்தைச் சேர்ந்த நதீம், 2024 ஆம் ஆண்டு பாரிஸுக்கு அனுப்புவதற்கு அந்நாட்டின் தேசிய விளையாட்டு அமைப்பால் நிதியுதவி பெற்ற ஒரே தடகள வீரர் ஆவார். மேலும், 27 வயதான அவர் அந்த நம்பிக்கையை பதக்கத்துடன் திருப்பிச் செலுத்தி இருக்கிறார்..
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது பழைய ஈட்டியை பயன்படுத்த முடியாமல் புது ஈட்டி மாற்றுவதற்காக கோரிக்கை வைத்த போது கூட நீரஜ் சோப்ரா அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. முழங்கை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டிருந்தாலும் கிரிக்கெட்டை பெரிய விளையாட்டாக மதிக்கும் பாகிஸ்தானில், தானும் இருக்கிறேன் என முத்திரை பதித்துள்ளார் அர்சாத் நதீம்…
ஒருமுறை அர்சாத் நதீமிடம் ஈட்டி எரிதலில் எப்படி ஆர்வம் வந்தது என கேட்ட போது, கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருந்த அவரை சகோதரர்கள் தான் தடகள போட்டிகளில் கவனம் செலுத்த கூறியதும். அப்போது தான் வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் கவனம் செலுத்தியதாக அவர் கூறியிருந்தார். ஒரு காலத்தில் கிராமத்தில் ஒரு மூங்கில் குச்சியை எடுத்து, அதை ஈட்டி போல் வடிவமைத்து தரையில் பயிற்சி செய்திருக்கிறார் அர்சாத் நதீம்…
இப்படியாக கடின உழைப்பாலும், வறுமையை தவிர்த்து, வெற்றியை கருத்தில் கொண்டு நிற்காமல் ஓடிய நதீமுக்கு, பாரிஸ் ஒலிம்பிக் மேடை மிகப்பெரும் அங்கீகாரத்தை கொடுத்ததோடு, உலகிற்கே அவரை அறிமுகம் செய்துள்ளது. ஏனெனில் இது அவரது ஒலிம்பிக் சாதனையாகும்… அதே சமயம் முடிந்த வரை போராடி, இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் வெள்ளி பதக்கத்தை பரிசளித்த தங்க மகன் நீரஜ் சோப்ராவை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி வருகிறது.
அர்சாத் நதீமுக்கும், நீரஜ் சோப்ராவுக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா, நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று இருக்கிறார் என அவரது தாயிடம் கேட்டபோது தங்கம் வென்ற அர்சாத் நதீமும் நம்ம பையன் தான் என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்…
அர்சாத் நதீம் பாகிஸ்தான் மட்டுமல்ல இந்தியர்களின் மனங்களையும் வென்றிருக்கிறார்.