2024ம் ஆண்டுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொலைத் தொடர்பு சிறப்பு விருதுக்கான விண்ணப்பிக்கலாம் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கல்வி, சுகாதாரம், வணிகம், விவசாயம் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளில் தொலைத் தொடர்பு சார்ந்த செயல்பாடுகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா தொலை தொடர்பு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் சிறந்து விளங்கிய அனைத்து இந்திய குடிமக்களும், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் இந்த விருதுக்கு தகுதி உடையவர்கள் என்றும், சிறப்பு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொலைத் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.
விருது குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு விருது, பொன்னாடை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் ரொக்கத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.awards.gov.in என்னும் இணையதளத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் எனவும் மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.