வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடரும்என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை உருவாக்கியது. இந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளை தனி விமானம் மூலம் ஆய்வு செய்த பிரதமர் மோடி, பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
இதனைத்தொடர்ந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனைக்கு சென்று பிரதமர் மோடி, கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் சந்தித்தனர். இதனையடுத்து பிரதமரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், இந்தத் துயரமான நேரத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசும், நாடும் துணை நிற்கும் என்று உறுதியளித்தார். விரிவான கோரிக்கை மனுவை முதல்வர் அனுப்பி வைப்பார் என்றார்.
வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். பேரிடர் மேலாண்மை நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பகுதியும் உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய நிலைமையை சமாளிக்கக்கூடிய அனைத்து மத்திய அமைப்புகளும் அணிதிரட்டப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றன என்று மோடி கூறினார். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம், மாநில காவல்துறை, உள்ளூர் மருத்துவப் படை, அரசு சாரா அமைப்புகள் மற்றும் இதர சேவை சார்ந்த நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள், உடனடியாக பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கியவர்களை பிரதமர் பாராட்டினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக குடும்பங்களை இழந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் புதிய நீண்டகாலத் திட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மோடி வலியுறுத்தினார். மத்திய அரசின் அனைத்து ஆதரவுடன் மாநில அரசு இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வீடுகள், பள்ளிகள், சாலை உள்கட்டமைப்பு மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் என இந்தப் பிராந்தியத்தில் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நாடும் மத்திய அரசும் எல்லா முயற்சியையும் எடுக்கும் என்று பிரதமர் வயநாடு மக்களுக்கு உறுதியளித்தார்.