ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கடற்பகுதியில் மீன்கள் செத்து மிதப்பதால் நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
வாலிநோக்கம் அருகே 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கழி முகத்துவாரம் தரவைப் பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசி வருகின்றது.
இதுகுறித்து புகார் தெரிவித்தும் உயிரிழந்த மீன்கள் அப்புறப்படுத்தப்படாததால், நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் மீன்கள் செத்து மிதப்பதற்கு உப்பு மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலப்பதே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர்களே தொழிற்சாலைகளை நடத்துவதால் புகாரளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.