பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து பரிந்துரைக்க தனி ஆணையம் அமைக்கும் தமிழக அரசுக்கு மக்கள் மீது இரக்கமே இல்லையா என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக நாளிதழில் செய்தி வெளியாகியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே மின்கட்டணம், வீடுகளுக்கான சொத்து வரி உள்ளிட்டவற்றை உயர்த்திய தமிழக அரசு, தற்போது பேருந்து கட்டண உயர்வுக்கும் தனி ஆணையம் அமைப்பது ஏழை, எளிய மக்கள் மீது சிறிதும் இரக்கமே இல்லை என்பதைத் தான் காட்டுகிறது என்றும், மேலும், பேருந்து கட்டணத்தை உயர்த்தி, அந்த பழியில் இருந்து தப்பித்து கொள்ளவே தனி ஆணையத்தை அரசு அமைக்கிறது என்றும் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
தனி ஆணையம் அமைப்பதையும், அதன் வாயிலாக கட்டணங்களை உயர்த்துவதையும் தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.