கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் அமைக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடப்பாண்டு மேட்டூர் அணை நிரம்பியதால் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் வழக்கம்போல் வீணாக கடலில் சென்று கலந்தது. இதையடுத்து, நீர் வீணாவதை தடுக்க, மாதிரி வேளூர் – கருப்பூர் மற்றும் அளக்குடி – திருக்கழிப்பாலை இடையே கதவணைகள் அமைக்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் இந்த திட்டங்கள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க, 5 கிலோ மீட்டருக்கு ஒரு கதவணை அமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆனைக்காரன் சத்திரம், தைக்கால், மாங்கனாம்பட்டு, மாதிரி வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு செய்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது