தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து வரும் 27ஆம் தேதி சென்னையில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நிலையில், அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தூய்மைப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாறன், தங்களுக்கு இதுவரை போனஸ்கூட வழங்கவில்லை என வேதனை தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பங்கள் வந்தபோதும் தூய்மைப் பணியாளர்களை கொண்டு மனித கழிவுகள் அகற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து வரும் 27ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.