அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பழைய மருத்துவமனையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையை கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
தற்போது இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் மட்டுமே பணியமர்த்தப்பட்டு கர்ப்பிணிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாகவும் , காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மருத்துவமனை செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நவீன சிகிச்சை உபகரணங்கள் இல்லாததால் கர்ப்பிணிகள் பழைய மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதாகவும், இதனால் அவர்கள் தேவையின்றி அலைக்கழிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், நவீன சிகிச்சை உபகரணங்களை புதிய மருத்துவமனையில் நிறுவி கர்ப்பிணிகளுக்கு சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், கர்ப்பிணிகள் அலைகழிக்கப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.