சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்தறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேரள அரசு தரப்பில், காவிரி தீர்ப்பாயத்தால் கேரள அரசுக்கு ஒதுக்கப்பட்ட 3 டிஎம்சி நீரை தேக்கதான் தடுப்பணை கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, தடுப்பணை கட்டும் விபரத்தையே தங்களுக்கு கேரளா தெரிவிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. 3 டிஎம்சி நீரைத்தான் எடுப்பார்கள் என்பதை எப்படி நம்புவது?, எப்படி நீரை அளவிடுவது? எனவும் தமிழக அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட பசுமைத் தீர்ப்பாயம், சிலந்தியாற்றில் தடுப்பணை கட்ட உரிய முன் அனுமதிகளை கேரள அரசு பெற்றுள்ளதா என்பது குறித்தும், பாம்பாறு துணைப்படுகையில் கேரள அரசு இதுவரை கட்டியுள்ள மற்றும் கட்ட திட்டமிட்டுள்ள தடுப்பணைகளின் விபரங்கள் குறித்தும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டது.