இந்தியாவும் பாகிஸ்தானும் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரே நேரத்தில் விடுதலை பெற்றன. அதற்கு அடுத்த ஆண்டு இலங்கைக்கும் விடுதலை கிடைத்தது. ஆங்கிலேயேர் ஆட்சியில் இருந்து ஒரே காலத்தில் சுதந்திரம் பெற்ற இந்த நாடுகள் இன்று எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளன? என்னென்ன சாதனைகள் புரிந்துள்ளன? என்பதைப் பட்டியலிட்டு பார்த்தால், உலகையே வழிநடத்தும் விஸ்வ குருவாக பாரதம் நிமிர்ந்து உயர்ந்து நிற்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆங்கிலேய ஆட்சியில் பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த நிலையில் விடுதலை பெற்று இந்தியா ஜனநாயக நாடாகவும், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசாகவும் புதிதாகத் தங்கள் சுதந்திரப் பயணத்தைத் தொடங்கி 77 ஆண்டுகள் ஆகிறது.
இத்தனை ஆண்டுகளில் 21 மாத அவசர நிலையைத் தவிர, இந்தியா தடையற்ற ஜனநாயகத்தை கொண்ட நாடாக திகழ்ந்து வருகிறது. அதே வேளையில், இது வரை பாகிஸ்தானில் 23 பிரதமர்கள் பதவி வகித்துள்ளனர். ஆனால் யாராலும் முழு பதவிக்காலத்தை முடிக்க முடியவில்லை. பாகிஸ்தானில் அதன் இராணுவ மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு இடையே அதிகாரத்துக்கான முடிவில்லாத சண்டையைத் தான் இன்றும் காண முடிகிறது.
உண்மையில், பாகிஸ்தானில் ஜனநாயகம் 1971ம் ஆண்டு தான் பிறந்தது என்று சொல்ல வேண்டும். அதிலும் பாகிஸ்தானின் அதிபர்களாக இதுவரை நான்கு ராணுவத் தலைவர்கள் இருந்துள்ளனர். அதாவது 77 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியே நடந்திருக்கிறது.
இந்தியாவில் ஜனநாயகம் மிகவும் வலுவாக உள்ளது என்பதை பல சர்வதேச புள்ளிவிவரங்கள் பலமுறை தெளிவுபடுத்தி உள்ளன. அதே புள்ளிவிவரங்கள் பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு ஒருவர் பிரதமர் ஆவது அவ்வளவு எளிதல்ல என்றும் சுட்டிக் காட்டுகின்றன.
1947 ஆம் ஆண்டு, மதத்தின் அடிப்படையில் நாட்டை அவசரம் அவசரமாக பிரித்து கொடுத்து விட்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, இந்தியாவின் எழுத்தறிவு சதவீதம் விகிதம் வெறும் 12 சதவீதம் தான். மேலும் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் வெறும் 30 ஆண்டுகள்தான். வறுமை, நோய், ஊட்டச் சத்து குறைபாடு ஆகியவை நாடெங்கும் தலைவிரித்தாடின. இந்தியாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அடித்தளம் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்று சொல்லி விடலாம். இந்நிலையில் சில வரலாற்றாசிரியர்கள் இந்தியா ஒரு தேசமாக நிலைக்காது என்று கணிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டனர்.
ஆனால் வேகமாக முன்னேறி, இன்றைக்கு, 77 சதவீதத்துக்கும் மேலான கல்வியறிவும் சராசரி ஆயுட்காலம் சுமார் 70 ஆண்டுகளாகவும், பிற வளர்ச்சி குறியீடுகளில் பாகிஸ்தானை விடவும் இந்தியா சிறப்பாக உள்ளது.
மேலும், இந்தியா ஒரு துடிப்பான மற்றும் நவீன தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை தளத்தை உருவாக்கியுள்ளதோடு, வளர்ந்த நாடுகளுக்கே வழிகாட்டும் நிலையில் குறிப்பிடத்தக்க சர்வதேச சக்தியாக இந்தியா தனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 3 சதவீதம் மட்டுமே. இந்த நிலை படிப்படியாக மாறி, இப்போது , உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விஸ்வரூபம் எடுத்துள்ளது.
உயர்திறன் கொண்ட தொழில்துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதனாலேயே கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பல கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப் பட்டுள்ளனர். கீழ் தட்டு மக்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கமாக மாறியுள்ளனர். கணினி துறையில் மென்பொருள் மற்றும் மருத்துவத் துறையில் தடுப்பூசிகள் போன்றவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக இந்தியா முன்னேறி உள்ளது.
பிரிவினையின் போது இந்திய அரசு கருவூல நிதி சரி பாதியாக பங்கு வைக்கப் பட்டாலும் எந்த ஒரு பாகிஸ்தானியரும் இன்றும் வளங்கள் பிரிக்கப்பட்ட விதத்தில், நியாயமில்லை என்று கூறுவார்கள்.
இரு நாடுகளும் தங்கள் சுதந்திரத்தின் 25வது ஆண்டு விழாவைக் கொண்டாடியபோது, தனிநபர் வருமானமாக இருந்தாலும், தங்க இருப்பாக இருந்தாலும், அந்நிய செலாவணி கையிருப்பாக இருந்தாலும், வெளிநாட்டு நிதியாக இருந்தாலும் சரி, இந்தியாவின் வளர்ச்சி பாகிஸ்தானை விட பலமடங்கு கூடியிருந்தது.
எண்பதுகளின் பிற்பகுதியில்தான், இந்தியா கொஞ்சம் தளர்ந்ததாக தெரிந்தாலும், மீண்டும் வளர்ச்சி பாதையில் நடக்கத் தொடங்கியது. 90 களில் நவீனப் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தி வேகமாக முன்னேறத் தொடங்கியது இந்தியா.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரை, சுதந்திரம் பெற்றதில் இருந்து, துடிப்பான தலைவர்களே நாட்டின் பிரதமராக இருந்துள்ளனர்.
சுதந்திரம் வந்த போதே பிரிவினை, பன்முகத் தன்மை கொண்ட நாட்டின் சிக்கலான வரலாறு, புவியியல் மற்றும் அதிகரிக்கும் மக்கள்தொகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பிரதமர்கள் நாட்டின் ஜனநாயக நரம்புகளைத் தளர்வடையாமல் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதில் மிகச் சிறந்த தேசப் பணியைச் செய்திருக்கின்றனர்.
பாகிஸ்தானில், இலங்கையில், மட்டுமில்லாமல் பிற அண்டை நாடுகளிலும் வறுமை,வேலைவாய்ப்பின்மை காரணமாக அரசியல் குழப்பங்கள், உள்நாட்டுக் கலகங்கள் ஏற்பட்டுள்ளன. இன்றும் அந்நாடுகள் ஸ்திர தன்மை இல்லாமல் தள்ளாடுவதை பார்க்க முடிகிறது.
சிறு சிறு அரசியல் குழப்பங்கள் இருந்தபோதிலும், 1947 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக ரீதியாக இந்திய மக்களுக்கு நிலையான அரசாங்கங்களையும் நிலையான தலைமைத்துவத்தையும் வழங்குவதில் இந்தியாவின் பிரதமர்கள் மட்டுமில்லாமல் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் ஜனநாயக பொறுப்புணர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ளன என்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
வாய்மையே வெல்லும் என்று சனாதன தர்மத்தின் அடிப்படையில் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் மிக தெளிவாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே சுதந்திரம் பெற்றதில் இருந்து சுதந்திரமான தேர்தல்களை நடத்துவதும் மற்றும் அமைதியான முறையில் ஆட்சி அதிகார மாற்றங்களை மேற்கொள்வதும் இயல்பாக இந்தியாவில் நடந்துள்ளன. மேலும் நீதித்துறை சுதந்திரமாகவும் ஊடகத் துறை மக்களின் குரலாகவும் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே, சர்வாதிகார அடிப்படையில் அரசு நடத்தும் அண்டை நாடான சீனாவுக்கு எதிராக ஒரு ஜனநாயக தன்மையோடு இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்து உள்ளது.
அமிர்த காலம் என்று அறிவித்து, 100வது சுதந்திர தினத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்று பாரதப் பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்து, பணியாற்றி வருகிறார்.
மாறாக, சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி பெறுவது எப்படி? அல்லது சீனா மற்றும் வளைகுடா நாடுகளிடம் எவ்வாறு கடன் பெறுவது என்பது பற்றி பாகிஸ்தானில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
இதில் இருந்தே இரு நாடுகளும் ஒரே நாளில் விடுதலை பெற்றாலும் இப்போது எந்த நிலையில் உள்ளன என்பது தெளிவாகத் தெரியவரும்.
இந்தியப் பிரிவினையால் 15 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். மேலும் கொடிய வகுப்புவாத வன்முறையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். மதத்தின் பெயராலான வன்முறைப் பிரிவினை ஏற்படுத்தி இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதி வைத்தார்கள் ஆங்கிலேயர்கள்.
வலிமையான மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்கள் விதியை மாற்றி அமைத்து வெற்றி அடைவார்கள் என்ற ராமாயணத்திலிருந்து பெற்ற உத்வேகத்தால் இந்திய தொடர்ந்து எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.
பன்முக கலாச்சார தன்மையோடும் ஜனநாயக கோட்பாடுகளுடன் இந்தியா முன்னேறுவது ஒவ்வொரு இந்தியருக்கும் சுதந்திர திருநாளில் பெருமிதம் என்றே சொல்லலாம்.