78-ஆவது விடுதலை நாளை இந்தியா கொண்டாடி வரும் நிலையில் திரைப்படங்களில் சுதந்திரப் போராட்டமும், தேசப்பற்றும் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டன என்பதை பார்க்கலாம்.
இந்தியாவை பொறுத்தவரை திரைப்படங்களும் மக்களும் இரண்டறக் கலந்தவர்கள். இன்றைக்கும் இனிமையான திரைப்பாடல்கள்தான் பலருக்கு தாலாட்டு. அப்படிப்பட்ட சினிமா மூலம் ஒரு கருத்தை எளிதாக அதே நேரத்தில் வலிமையாக மக்களிடம் கொண்டு சேர்த்துவிட முடியும்.
அதிலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்சியையே மாற்றிய வரலாறு சினிமாவுக்கு உண்டு. அத்தகைய திரைப்படங்கள் மூலம் விடுதலை வேட்கையும் நாட்டுப்பற்றும் மக்கள் மத்தியில் அதிகம் பரப்பப்பட்டன.
தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான ‘காளிதாஸிலேயே’ சுதந்திர உணர்வை ஊட்டும் பாடல் இடம்பெற்றது. “ராட்டினமே காந்தி கை பானமாம்” என்ற பாடல் மூலம் தேசப்பிதா காந்தியைப் பற்றி பேசியது காளிதாஸ்.
1933-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீ வள்ளி திருமணம்’ படத்தில் பறவைகளை விரட்டியபடி நாயகி பாடும் பாடலில் “வெட்கம் கெட்ட வெள்ளை கொக்குகளா விரட்டி அடித்தாலும் வாரீகளா” என்று மறைமுகமாக ஆங்கிலேயர்களை விமர்சித்தார்கள்.
1936-ல் ரிலீசான ‘சத்யசீலன்’ படத்தில் “சுதந்திரம் பெற வழியொன்று சொல்லு பாப்பா” எனப்பாடினார் தியாகராஜ பாகவதர்.
1938-ஆம் ஆண்டு வெளியான ‘அனாதைப் பெண்’ திரைப்படம் “பாரதமாதா பரிபூரண சுதந்திரம் அடைவாளோ…” என்றும், ‘பஞ்சாபகேசரி’ திரைப்படம் “வந்தே மாதரம்.. ஜெயஜெய வந்தே மாதரம்..” என்றும் முழங்கின.
அதுவரை பாடல்கள் மூலம் பரப்பப்பட்டு வந்த சுதந்திர உணர்வை முதன்முறையாக காட்சிப்படுத்திய திரைப்படம் என 1939-ல் வெளிவந்த ‘தியாக பூமியை’ சொல்லலாம்.
முதலாம் உலகப்போர் தொடங்கிய நேரத்தில் சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது.
அதைத் தொடர்ந்து ‘தியாக பூமி’ படத்துக்கு ஆங்கிலேயே அரசு தடை விதித்தது. எனினும் படத்தை இயக்கிய கே.சுப்ரமணியம், கதையாசிரியர் கல்கி, விநியோகஸ்தர் எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் தடை உத்தரவு வந்து சேரும் வரை சென்னை கெய்ட்டி திரையரங்கில் படத்தை தொடர்ந்து திரையிட்டனர்.
‘தியாக பூமி’ ஓடிக்கொண்டிருந்த போதே தடை உத்தரவு திரையரங்குக்கு வந்ததால் படத்தை உடனே நிறுத்தும்படி காவல்துறையினர் கூறினர். அதை ஏற்க மக்கள் மறுத்ததால் தியேட்டருக்கு உள்ளேயே தடியடி நடத்தப்பட்டது.
1939-ல் ரிலீசான ‘மாத்ருபூமி’ திரைப்படத்தில் நாட்டுக்கு துரோகம் செய்யும் கணவன் கட்டிய தாலியை கழற்றி அவரது முகத்திலேயே எறிவார் மனைவி.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆங்கிலேயே அரசு சிறையில் அடைத்துக் கொண்டிருந்த நேரத்தில், 1940-ல் வெளியான ‘மணிமேகலை’ படத்தில் “சிறைச்சாலை இது என்ன செய்யும்” என தமது கம்பீரக் குரலால் பாடினார் கே.பி.சுந்தராம்பாள்.
1947-ஆம் ஆண்டு வெளியான ஏ.வி.எம்.மின் ‘நாம் இருவர்’ படத்தில் பாரதியாரின் புரட்சிகரமான பாடல்கள் இடம்பெற்றன. (breath)
விடுதலைக்குப்பிறகு அதற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றிய படங்கள் வந்தன. இன்றும் பலருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் சிவாஜிதான் நினைவுக்கு வருவார்.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், பாரதியார், பூலித்தேவன், கொடிகாத்த குமரன், மருது சகோதரர்கள் என சுதந்திரத்துக்காக பாடுபட்ட பலரைப் பற்றி திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.
1990-களில் ‘ரோஜா’, ‘ஜெய்ஹிந்த்’, ‘சிறைச்சாலை’, ‘இந்தியன்’ உள்ளிட்ட படங்கள் நாட்டுப்பற்றை பேசின.
தமிழ் மட்டுமின்றி, ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நாட்டுப்பற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் தற்போது வரை வந்து கொண்டேதான் இருக்கின்றன.