நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்கள் தங்களின் கனவுத்திட்டமான அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்காக 60 ஆண்டுகாலமாக போராடி வந்தனர். அத்திக்கடவு – அவினாசி திட்டம் என்பது, பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து வெளியேறும் 2 ஆயிரம் கன அடி வெள்ள உபரி நீரை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சியான பகுதிகளின் நீர்நிலைகளில் நிரப்பி பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது.
ஆனால் அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுமார் ஆயிரத்து 916 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 45 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் எனவும், சுமார் 50 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.