காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகளுக்கு விதைநெல், உரம், இடுபொருள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளை கட்டி வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
முந்தைய ஆண்டுகளைப் போலவே நடப்பாண்டிலும் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினால் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துப் போன நிலையில், தற்போது உபரியாக கிடைக்கும் காவிரி நீரை நம்பி சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
கடுமையான வறட்சி, பருவம் தவறிய மழை, இயற்கை பேரிடர்கள் என எத்தனையோ இக்கட்டான சூழல்களிலும் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு, மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர் சம்பா சாகுபடி செய்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மழைக்காலங்களில் தமிழகத்திற்கு கிடைக்கும் நீரை தடுப்பணைகளை கட்டி சேமிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைக்கு செவிசாய்க்காத திமுக அரசால், கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரும் விவசாயத்திற்கு பலனளிக்காமல் வீணாக கடலில் கலப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி ஆற்றுப்படுகை முழுவதையும் முறையாக தூர்வாருவதற்கான திட்டங்களை கொண்டு வராமல், ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதால் எந்தவித பலனுமில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையிலும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைநெல், உரம், இடுபொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை அறிவிப்பதோடு, இனியாவது கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளை கட்டி வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.