தமிழகத்தில் நில அபகரிப்பு, கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் போலீசாரின் ஆதரவுடன் நடைபெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சோழிங்கநல்லுாரில் நடைபெற்ற நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு நிலுவையில் உள்ள போது எதிர்மனுதாரரான கோபாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய ஆட்கள் கட்டிடங்களை இடித்து சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதை செய்யாமல் வேடிக்கை பார்த்தது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதில் கடமை தவறிய நீலாங்கரை காவல் ஆய்வாளருக்கு எதிராக புகாரளித்த போது அதனை விசாரித்த உதவி கமிஷனர், நீலாங்கரை காவல் ஆய்வாளர் மீது தவறே இல்லை என கூறி புகாரை உரிய விசாரணையின்றி முடித்து வைத்துவிட்டார் எனவும் நீதிபதி கோபத்துடன் தெரிவித்தார்.
இந்த சொத்து அபகரிப்பு காவல்துறையின் துணையுடன் நடந்துள்ளது என தெரிவித்த நீதிபதி அரசியல் வாதிகளுடன் ரவுடிகள் கைகோர்த்து செயல்படுவதால், இதுபோன்ற வழக்குகளில் போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர் என தெரிவித்தார்.
போலீசாரின் இத்தகைய போக்கால் பொதுமக்கள் காவல்துறை மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்துவிடுவர் எனவும் தெரிவித்தார். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்காது என நீதிபதி எச்சரிக்கை தெரிவித்தார்.
மனுதாரர் அளித்த நிலஅபகரிப்பு புகாரை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு தகுதி உள்ளதால் இந்த விசாரணையை சிறப்பு குழுவிடம் ஒப்படைக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.