அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அரசாணையில், அரசுப் பள்ளிகளில் படித்து பொறியியல் கல்லூரிகளில் 7.5% என்ற முன்னுரிமையில் சேரும் மாணவர்களின் கல்விக்கான செலவினங்களை அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதில் கல்வி கட்டணம், விடுதிக்கட்டணம், போக்குவரத்துகட்டணம் உள்ளிட்டவை அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்த கட்டணமும் பொறியியல் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து பொறியியல் மற்றும் தொழில் கல்லூரிகளில் அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் பட்டதாரி மாணாக்கர்களிடம் கல்லூரி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க கூடாது என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணைகளை மீறி பொறியியல் கல்லூரிகள் இடஒதுக்கீட்டில் சேர வரும் மாணவர்களிடம் கட்டணம் செலுத்தக்கோரி கல்லூரி நிர்வாகங்கள் வற்புறுத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அரசாணைகளை மீறி மாணவர்களிடம் கட்டாயமாக கல்விக்கட்டணங்கள் பெறப்பட்டால் கல்லூரிகளின் நிர்வகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாணை வாயிலாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.