தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், 37 வயதான பேடோங்டார்ன் ஷினவத்ரா தாய்லாந்தின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தாய்லாந்தில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பிச்சித் சைபானை அமைச்சராக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பிச்சித் சைபானை அமைச்சராக நியமிக்க பரிந்துரை செய்த பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
அமைச்சர்களை தகுதி அடிப்படையில் நியமிக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாகவும், பிரதமர் ஸ்ரெத்தா தவிசின், அரசு விதிமுறைகளை மீறியதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக ஸ்ரெத்தா தவிசின் நீடிப்பார் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
பிரதமர் பதவி ஏற்று ஓராண்டு கூட முழுமையாக முடிவடையாத நிலையில் ஸ்ரெத்தா தவிசின் தனது பதவியை இழந்தார்.
இந்த சூழலில், முன்னாள் நீதித் துறை அமைச்சர் சாய் காசெம்மும் பியூ தாய் கட்சியின் தலைவரும் முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகளுமான பேடோங்டார்ன் ஷினவத்ராவும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தனர்.
இந்நிலையில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட பியூ தாய் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பிரதமராக தேர்வு செய்தனர். பேடோங்டார்ன் ஷினவத்ராவுக்குப் பிரதமர் பதவி வழங்க 11 கூட்டணிக் கட்சிகளும் ஒப்புதல் அளித்தன.
464 உறுப்பினர்கள் கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்தில் 319 உறுப்பினர்கள் பேடோங்டார்ன் ஷினவத்ரா ஆதரவாக வாக்களித்த நிலையில், அவர் தாய்லாந்தில் பிரதமராகி இருக்கிறார்.
பியூ தாய் கட்சியைச் சேர்ந்த ஸ்ரெத்தா தவிசின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட 48 மணி நேரத்தில் அதே தக்சின் குடும்பத்தில் இருந்து ஒருவர் பிரதமராகி இருக்கிறார்.
இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் தாய்லாந்து பிரதமராகப் பதவியேற்ற ஷினவத்ரா குடும்பத்தின் நான்காவது பிரதமர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். மேலும் தனது அத்தை யிங்லக்கிற்குப் பிறகு தாய்லாந்து பிரதமர் பதவியில் அமரும் இரண்டாவது பெண் பிரதமர் இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
பேடோங்டார்ன் ஷினவத்ராவின் தந்தை மற்றும் அத்தை தலைமையிலான அரசை முறையே 2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தாய்லாந்து இராணுவப் புரட்சியால் நீக்கப்பட்டன.
திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பேடோங்டார்ன் ஷினவத்ரா, கடந்த ஆண்டு பியூ தாய் கட்சியின் முகமாகவும் பிரபலமானார். பின்னர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார் .
தனக்கு எட்டு வயதான போதுதான் தனது தந்தை அரசியலில் நுழைந்தார் என்று கூறும் பேடோங்டார்ன் ஷினவத்ரா, அரசியல் என்பது 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வாழ்வோடு ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
முன்னாள் பிரதமர் ஸ்ரெத்தாவின் அரசுக்கும் தாய்லாந்து மத்திய வங்கிக்கும் இடையே வட்டி விகிதங்கள் தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.
இந்நிலையில் , தாய்லாந்தில் புதிய பிரதமராக பதவி ஏற்கும் பேடோங்டார்ன் ஷினவத்ரா, அதிகரித்துவிட்ட வாழ்க்கைச் செலவினத்தையும், வரலாறு காணாத அளவுக்குப் பெரிதாகி விட்ட சராசரி குடும்பங்களின் கடனையும் எப்படி சமாளிக்க போகிறார் என்பது தான் தாய்லாந்து மக்களின் கேள்வியாக உள்ளது.