தீபாவளி பண்டிகையின்போது 15 நாட்கள் வணிகம் செய்யும் வகையில் அரசு தற்காலிக உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பில் 4வது பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடு மற்றும் பட்டாசு வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பட்டாசு விற்பனை வணிகர்கள் கலந்து கொண்ட நிலையில், தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடப்பாண்டுக்கான சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன், தீபாவளி பண்டிகையின்போது 15 நாட்கள் வணிகம் செய்யும் வகையில் 30 நாட்களுக்கு முன்பாக தற்காலிக உரிமங்களை வழங்க வேண்டும், நிரந்தர பட்டாசு கடை உரிமங்களை புதுப்பிக்க 90 நாட்களுக்குள் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலும், தங்களது நீண்டநாள் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.