இளம்பெண்கள் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அம்மாநில கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியின் வயதை மேற்கோள்காட்டி, இது குற்றமாகாது என்றும், சம்பந்தப்பட்ட இளைஞரை விடுவித்தும் உத்தரவிட்டது.
மேலும், வளரிளம் பெண்கள் தங்களின் பாலியல் உணர்ச்சியை கட்டுப்படுத்த பழக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. அந்த வகையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்ஸோ வழக்கைக் கையாள்வது தொடர்பாக போலீஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர்.
மேலும், தீர்ப்பு எழுதுவது தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், எக்காரணம் கொண்டும் சொந்த கருத்தை திணிக்கக் கூடாது என அறிவுறுத்தினர். அத்துடன், குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 20 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.