சர்வதேச வர்த்தகத்துக்கு சீனாவை விட்டால் வழியில்லை என்ற நிலை மாறி வருகிறது. சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை உலக நாடுகள் நம்பி இருக்கின்றன. சீனாவை முந்தும் வகையில் , இந்தியாவின் துறைமுகங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு .
உலகப் பொருளாதாரத்துக்குத் துறைமுகங்கள் மிக முக்கியமானவையாகும். சர்வதேச சரக்குகளில் 70 சதவீதம் துறைமுகங்கள் வழியாகவே செல்கிறது.
உலகில் ஐந்து பெரிய கொள்கலன் துறைமுகங்களில் நான்கு சீனாவில் உள்ளன. மேலும் சர்வதேச அளவில் முதல் 20 துறைமுகங்களில் ஐந்து மட்டுமே இப்போது கிழக்கு ஆசியாவிற்கு வெளியே அமைந்துள்ளன.
பெரும்பாலான கிழக்கு ஆசியா-அமெரிக்கா-ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க சரக்குக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக செல்கின்றன. இந்தியா 7517 கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்டுள்ளது. 95 சதவீத அளவிலான இந்திய வர்த்தகம் கடல்வழிப் போக்குவரத்து மூலம் நடைபெறுகிறது. இந்தியாவின் மொத்த வர்த்தக மதிப்பில் இது 70 சதவீதமாகும் .
இந்தியாவில் 12 பெரிய மற்றும் 205 சிறிய மற்றும் இடைநிலை துறைமுகங்கள் அமைந்துள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் 12 முக்கிய இந்திய துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து 6.8 சதவீதம் அதிகரித்து உள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிராவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம் சுமார் 15.12 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து கொச்சி துறைமுகம் அதிக சரக்குகளைக் கையாண்டிருக்கிறது.
இந்தியா வழியாக செல்லும் ஒவ்வொரு 4 கப்பல் கொள்கலன்களில் ஒன்று மும்பைக்கு தெற்கே அரேபிய கடலுக்குள் செல்லும் கப்பல்களில் ஏற்றப்படுகிறது அல்லது இறக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சரக்கு கொள்கலன்களின் ஓட்டம் சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் மோதல் ஏற்பட்டிருக்கும் சூழலில் , சர்வதேச வணிக விநியோக சங்கிலியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அடுத்து அமெரிக்க அதிபராக யார் வெற்றி பெற்றாலும், அமெரிக்க- சீன வர்த்தக உறவுகள் நிலையற்றதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தின் தலைவர் உன்மேஷ் ஷரத் வாக் கூறுகையில், “உலக நாடுகள் முழுவதுமாக சீனாவை சார்ந்திருப்பதை விரும்பாத நிலையில், சீனாவுக்குச் சிறந்த மாற்றாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
உதாரணமாக, வால்மார்ட் போன்ற முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் விநியோக தளத்தை இந்தியாவுக்கு மாற்றுகின்றனர்.
ஏற்கெனவே ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில், ஐந்து டெர்மினல்களில் ஒன்றின் அளவை இரட்டிப்பாக்கி, இரண்டு கட்டுமானம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி மகாராஷ்டிராவில் தஹானுவுக்கு அருகில் உள்ள வாதவன் ஆழ்கடல் துறைமுகத்தை 76,200 கோடி ரூபாயில் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த திட்டம் ஆண்டுக்கு 298 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான சரக்குகளைக் கையாளும் என்றும் இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டதும் உலகின் முதல் 10 துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் கதி சக்தி திட்டத்தின் நோக்கத்தின் படி சுமார் 10 லட்சம் நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர்ப் பொருளாதாரத்துக்குப் பங்களிக்கும் வகையில் இந்த துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த புதிய துறைமுகமானது ஒன்பது கொள்கலன் முனையங்களை உள்ளடக்கியதாகும். ஒவ்வொன்றும் 1000 மீட்டர் நீளம், நான்கு பல்நோக்கு பெர்த்கள், கடலோர பெர்த், நான்கு திரவ சரக்கு பெர்த்கள், ஒரு ரோ-ரோ பெர்த் மற்றும் ஒரு கடலோர காவல்படை பெர்த் நிலைகளை கொண்டதாகும். இது உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களுக்கு இடமளிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. அதாவது, 24,000 பெட்டிகளை வைத்திருக்கும் அளவுக்கு பெரியதான சரக்கு கப்பல்களை கையாளும் திறன் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மற்ற துறைமுகங்கள் 18,000 கொள்கலன்களைக் கொண்டு செல்லும் கப்பல்களைக் கையாள முடியும்.
இந்தியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவுக்கு அனுப்பும் சரக்குகளில் சுமார் 25 சதவீதம் சிங்கப்பூர், துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது கொழும்பு, இலங்கை ஆகிய துறைமுகங்கள் வழியாக அனுப்பப்படுகிறது. இதனால் இந்திய ஏற்றுமதியாளருக்கு அதிக செலவாகிறது.
இந்தியா உருவாக்கும் புதிய துறைமுகம் இத்தகைய செலவுகளைக் குறைப்பதற்கும், விநியோக நேரத்தை விரைவுபடுத்துவதற்கும் இலக்காக கொண்டுள்ளது.
இதனிடையே, கேரளாவில் உள்ள புதிய சர்வதேச துறைமுகமும் , தானியங்கி முறையில் , மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் பெருகிவரும் சரக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போக்குவரத்தை விரைவாக்கும் வகையில் மேம்படுத்தபட்ட சாலைகள் மற்றும் இரயில் தடங்களை உருவாக்குவதிலும் மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது.
இந்தியாவின் 12 பெரிய துறைமுகங்களில் கப்பல்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் இந்தியாவின் கப்பல் துறை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தாலும், விரைவில் சீனாவுக்கான சிறந்த மாற்றாக இந்தியா உருவெடுக்கும் என் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தின் (JNPA) தலைவரான உன்மேஷ் ஷரத் வாக்.