அன்றாட தேவைக்காக லாரிகளை ஓட்ட வாழ்க்கை நிர்பந்தித்தாலும் , சமையலில் ஒருவருக்கு இருந்த ஆர்வம், அவருக்கு பெரும் புகழும் பெரும் பணத்தையும் கொடுத்திருக்கிறது . அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ராஜேஷ் ரவானி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலைகளில் டிரக் ஓட்டும் டிரைவராக இருந்து வருகிறார்.
சிறு வயது முதலே சமையலில் இருந்த ஆர்வத்தால், R Rajesh Vlogs என்ற யூடியூப் சேனலைத் தொடங்கி இருக்கிறார். எதிர்பாராத விதமாக அதிக பார்வையாளர்களைக் கவர்ந்த அவரின் யூடியூப் சேனல் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கிறது.
நாளுக்கு நாள் சீராக வளர்ந்து வரும் அந்த யூடியூப் சேனலில் அவரது சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் வைரல் வீடியோக்கள் ஏராளமாக உள்ளன. பட்டர் சிக்கன், ஃபிரைடு ரைஸ் மற்றும் பல சுவையான உணவுகளுடன் பார்வையாளர்களைத் தன் திறமையால் கட்டிப் போட்டு வைக்கிறார் ராஜேஷ் ரவானி.
நீண்டதூரம் லாரி ஒட்டிச் செல்லும் போது சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு சமையல் செய்து சாப்பிடுவது வழக்கம். ஒரு நாள் தான் சமைக்கும் உணவு குறித்து யூ டியூபில் வீடியோ பதிவேற்றி உள்ளார் ராஜேஷ் ரவானி.
அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து சமையல் வீடியோக்கள் வெளியிட்டு ஆன்லைனில் பிரபலமாகி இருக்கிறார்
இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா, தனது எக்ஸ் தளத்தில் ராஜேஷ் ரவானியைப் பாராட்டி இருந்தார்.
மேலும் ஒருவரின் வயது அல்லது தொழில் எவ்வளவு அடக்கமானதாக இருந்தாலும், புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஒருவர் தம்மை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியும் என்றும், அது ஒருபோதும் தாமதமாகாது என்றும், அதை ராஜேஷ் ரவானி நிரூபித்துள்ளார் என்றும் ஆனந்த் மகேந்திரா தனது பதிவில் தெரிவித்திருந்தார்.
தனது தந்தை காலமான பிறகு வேறு வழியில்லாமல் டிரக் டிரைவரானதாக கூறும் ராஜேஷ் ரவானி குடும்பத்தின் ஏழு குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் வாடகை வீட்டில் தான் இருந்தோம் என்றும், இப்போதுதான் சொந்த வீட்டுக்கு குடி போகப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
டிரக் டிரைவர் வேலை மற்றும் யூடியூப் சேனல் இரண்டையும் தனது குடும்பத்தின் ஆதரவில் ஒரே நேரத்தில் ராஜேஷ் ரவானி நிர்வகித்து வருகிறார்.
டிரக் டிரைவராக மாதத்திற்கு அதிகபட்சம் 30,000 வரை சம்பாதிப்பதாக தெரிவித்த ராஜேஷ் ரவானி , யூடியூப்பில் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு மாதத்துக்கு சராசரியாக 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக பெருமையுடன் கூறியிருக்கிறார்.
முதலில் தனது முகத்தைக் காட்டாமல் வீடியோ வெளியிட்டு வந்தார். தன் வீடியோவை பார்த்தவர்கள், முகத்தைக் காட்டச் சொல்லி கேட்டதால் , இப்போது தனது முகத்துடன் வீடியோ எடுத்து பதிவேற்றி வருகிறார்.
தமது சமையல் வீடியோக்களை தமது மகனே எடுத்து வருவதாக பெருமையுடன் கூறும் ராஜேஷ் ரவானி, ஒரே நேரத்தில் டிரக் ஓட்டுநராகவும் யூடியூபராகவும் சாமர்த்தியமாக சமாளித்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.