பெருந்தன்மையோடு ராஜ் நாத் சிங் இங்கு வந்ததை போலவே முதல்வர் ஸ்டாலினும் பெருந்தன்மையுடன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று தமிழகத்திற்கு என்ன வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும் எனப் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தை திமுகவினர் முற்றுகையிட்ட சேதப்படுத்தினர். இது தொடர்பாக அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சாட்சி அளிக்க இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்தார்.
சாட்சியை அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழில் சௌந்தரராஜன்,
23.09.2007 அன்று கமலாலயம் திராவிட முன்னேற்ற கழகத்தினரால் தாக்கப்பட்டது. கல்கத்தாவில் ஏதோ ஒரு சாமியார் ஏதோ ஒரு கருத்தை தெரிவித்தார் என்பதனால் வன்முறையாக அன்றைய பாஜக அலுவலகத்தை திமுகவினர் தாக்கினார்கள்.
பாஜக அலுவலகத்தின் கண்ணாடி உடைந்தது. அலுவலகத்தினால் இருந்த எங்களுக்கு காயம் ஏற்பட்டது. அன்றைய தினம் நான் பொதுச் செயலாளராக இருந்தேன். அப்போது கையில் அடிபட்டு அதனால் வீக்கம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். கற்களை கொண்டு தாக்கி அலுவலகத்திற்குள் புகுந்து அனைவரையும் தாக்க முயற்சி செய்தார்கள். நாங்கள் தடுத்ததால் அவர்களால் அலுவலகத்திற்குள் வர முடியவில்லை.
அன்றைய மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் 500 முதல் 1000 பேர் தெருவோரத்தில் நின்று பத்து பதினைந்து பேரை தாக்குதல் நடத்த ஏவினார்கள். அன்றைய பொழுது இந்த சம்பவம் இரு மிகப் பெரிய தாக்குதலாக இருந்தது.
வன்முறை அரசியலில் எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது. பாஜகவின் வளர்ச்சியின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு பாஜகவினர்மீது தாக்குதல் ஏற்படுத்தினால் கட்சியின் வளர்ச்சியை தடுக்கலாம் என செய்த தாக்குதல்தான் இந்த தாக்குதல்.
தாக்குதலின் போது என்னோடு நின்ற தொண்டர்கள் குறிப்பாக பெண்கள் நின்றார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நெடுங்காலமாக பாஜகவுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த விதத்திலும் வன்முறை அரசியல் இருக்கக் கூடாது என்பதனை அழுத்தமாக பதிவு செய்கிறேன்.
தாக்குதல் சமயத்தில் எனக்கு ஏற்பட்ட காயத்தின் உட்காயம் சரியானாலும் வெளிகாயம் இன்னும் ஆறாமல் இருக்கிறது. இந்த தாக்குதல் நடந்த சமயத்தில் மருத்துவராக இருந்தேன். எனக்கு ஏற்பட்ட காயத்தினால் என்னால் என்னுடைய மருத்துவ வேலையை செய்ய முடியாமல் போனது. ஆனாலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டோம்.
இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடக்கக்கூடாது நடந்ததற்கான சாட்சியை இப்போது நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறேன். எந்த விதத்திலும் அரசியலில் வன்முறை இருக்கக்கூடாது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன். அப்போது இருந்தது போல இல்லாமல் திமுக மாற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
நாணய வெளியிட்டு விழா மிகவும் வெளிப்படையாகவே நடந்தது. மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து நடத்தும் விழாவாகவே இது இருந்தது. மாநில அரசு கோரிக்கை வைத்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் வந்தார். இது அரசு விழா அரசியல் விழா அல்ல அரசு விழாவை அரசு விழாவாகவும் அரசியல் விழாவை அரசியல் விழாவாகவும் பார்க்க வேண்டும். இப்படியான ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை உருவாக வேண்டும் என நான் நீண்ட காலமாக காத்திருந்தேன்.
பாரதப் பிரதமர் அண்ணன் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கலைஞர் பற்றிய நல்ல தன்மைகளை எடுத்துக் கூறியிருக்கிறார். இப்படி ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை வரவேண்டும் என நினைக்கிறேன். மாற்றுக் கட்சி தலைவரிடம் இருக்கும் நல்ல தன்மையை எடுத்துச் சொல்வதில் தவறில்லை. அதனால் அவர்களது கொள்கை, நடைமுறை அரசியல் நடைமுறையில் ஒத்துக்கொள்கிறோம் என்று அர்த்தமில்லை.
அப்படி பார்த்தால் இங்கு இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் மோடி அவர்களை விமர்சித்திருக்கிறார்கள். பாரதப் பிரதமர் அரசியல் நாகரீகத்தோடு நடந்து கொண்டார் அரசு விழா அரசியல் விழாவாக விவாதம் ஆக்கப்படக்கூடாது. அரசு விழாவை சுற்றி சுற்றி அரசியலுக்குள் கொண்டு வருகிறார்கள். மோடியை கோ பேக் என யாரும் சொல்ல முடியாது அப்படி சொல்பவர்களே அவரை வரவேற்கும் நிலை வரும்.
எதிர்வினை அரசியலை செய்வதை விட முதல்வரோ பிரதமரோ வந்தால் அவரை வரவேற்று நேர்மறை அரசியலை செய்ய வேண்டும். ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று வணங்கியதை மரியாதை ஆகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்திற்கு கலைஞர் ஆற்றிய தொண்டினை எடுத்து சொல்வதனை தவறாக பார்க்க முடியாது. அரசு வேரு அரசியல் வேறு இந்த இணக்கம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
இதனை அன்பு உணர்ச்சியாக பார்க்க வேண்டுமே தவிர காழ்புணர்ச்சியாக பார்க்கக் கூடாது. நாணய வெளியீட்டு விழாவிற்கு பெருந்தன்மையோடு ராஜ் நாத் சிங் இங்கு வந்ததை போலவே முதல்வர் ஸ்டாலினும் பெருந்தன்மையுடன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று தமிழகத்திற்கு என்ன வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும்.
கூட்டணி குறித்து நாங்கள் சொல்ல முடியாது.. தனித்தன்மையோடு பாஜக வளர்ந்து வருகிறது. அரசு விழாவில் இருவர் வந்தாலே கூட்டணி என்று சொல்லி விட முடியாது . கூட்டணி என்பது அரசியல் நிகழ்வுகளை பார்த்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பது அதை இப்பொழுதே சொல்ல முடியாது என்றார்.