இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நாகை – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து சேவை நடைபெறும் என தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாகை – இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கப்பல் போக்குவரத்து சேவை, தொடங்கிய சில தினங்களிலேயே நிறுத்தப்பட்டது.
கடந்த 16ஆம் தேதி நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய நிலையில், முதல் நாள் 44 பேர் நாகையில் இருந்து இலங்கைக்கு சென்றனர்.
இந்நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியதால் நாகை – இலங்கை இடையே வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து சேவை இயக்கப்படும் என தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு என மூன்று நாட்கள் மட்டுமே இருநாட்டுக்கு இடையே கப்பல் சேவை செயல்படும் எனவும், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.