கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் கடந்த 9ம் தேதி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி வழங்கக்கோரியும், பணியில் இருக்கும் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென உச்சநீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் சுகாதார உட்கட்டமைப்பு எவ்வாறு செயல்படும்? என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமனறம், பணிக்கு திரும்பும் மருத்துவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.
















