கேரளாவில் காணாமல்போன அசாமைச் சேர்ந்த 13 வயது சிறுமி 37 மணி நேர தேடுதலுக்கு பின்பு விசாகப்பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.
திருவனந்தபுரம் காஜாக்குட பகுதியில் அசாமைசேர்ந்த குடும்பத்தினர் தோட்ட தொழிலாளர்களாக தங்கி பணியாற்றி வரும் நிலையில், இவர்களது 13 வயது சிறுமி காணாமல் போய் உள்ளார். பெற்றோர் திட்டியதால் துணிகளை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி சென்ற சிறுமி, பின்னர் எழும்பூரில் இருந்து மேற்குவங்கம் செல்லும் விரைவு ரயிலில் பயணித்துள்ளார். மேற்குவங்க விரைவு ரயிலில் சென்றபோது சிறுமியை அடையாளம் கண்ட மலையாள தொழிலாளர் சங்க உறுப்பினர், அவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
















