மயிலாடுதுறையில் தனிக்குடித்தனம் செல்ல கணவனின் குடும்பத்தார் அனுமதிக்காததால், கழுத்தில் தூக்குக் கயிற்றுடன் வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பிவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், மொழையூர் கிராமத்தைச் சேர்ந்த தீபா என்பவர், இப்ராஹிம் என்பவரை காதலித்து வந்த நிலையில், 2016ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் தனது பெயரை அத்திபா என்று மாற்றிக் கொண்ட தீபாவிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
இப்ராஹிம் தனது பெற்றோர் மற்றும் அண்ணனுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த நிலையில், தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்ற அத்திபாவின் விருப்பத்திற்கு இப்ராஹிமின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அத்திபா கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக்கொண்டு, தனது பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று செல்போனில் வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.