நீதிபதிகளை நியமனம் செய்யும் விவகாரம் தொடர்பாக 18 மாநில தலைமை செயலாளர்கள் வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையை சார்ந்த அதிகாரிகளை நியமனம் செய்வது, ஓய்வூதியம் வழங்குவது ஆகியவை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த விவகாரத்தில் பதிலளிக்காத 18 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கையை முன்வைத்தனர்.
ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அரசு தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் இருப்பினும் குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்த வழக்கறிஞர்கள்,
தற்போது தமிழ்நாடு தலைமை செயலாளர் புதியதாக பொறுப்பேற்றவர் என்பதால் அவர் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கூறினர்.
இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரத்தில், 4 வாரங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும் எனவும் தலைமை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்தும் எந்தவித விலக்கும் அளிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.