வியூஸ், லைக்ஸ்-க்காக ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலையில் பணத்தை வாரி இறைத்த யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை அதிகம் பேர் பார்க்கவும், விருப்பம் தெரிவிக்கவும் அதனை நிர்வகிப்பவர்கள் பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள கூக்கட்பள்ளி சாலையில், யூடியூபர் ஒருவர் பணத்தை வாரி இறைத்துள்ளார். “its_me_power,” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பிரபலமாகி இருக்கும் மகாதேவ் என்பவர், கூக்கட்பள்ளி சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தமது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.
அப்போது திடீரென்று பண்டல் பண்டலாக பணத்தை வானத்தை நோக்கி வாரி இறைத்துள்ளார். பொதுமக்களும் அவற்றை எடுத்துக் கொண்ட நிலையில், தாம் வாரி இறைத்த பணம் எவ்வளவு என்பதை தெரிவிக்கும் நபருக்கு உரிய பரிசு வழங்கப்படும் என இணையத்தில் அறிவித்துள்ளார்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.