இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினத்தையொட்டி டெல்லி பாரத் மண்டபத்தில், விண்வெளி தொழில்நுட்பங்களின் கண்காட்சியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பார்வையிட்டார்.
கடந்தாண்டு சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி உலக சாதனை படைத்த நாளான ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
அதன்படி, தேசிய விண்வெளி தினத்தின் முதல் ஆண்டு விழா இஸ்ரோ சார்பில் கொண்டாட்டப்பட்டது. டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, விண்வெளி தொழில்நுட்பங்கள் தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் சோமநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், கடந்தாண்டு சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாகவும், இந்த சாதனையால் இந்திய விண்வெளித்துறை உலகளவில் பேசப்பட்டதாகவும் தெரிவித்தார். நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்தை சிவ சக்தி புள்ளி என்று அறிவித்த பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், நிலவின் தென்துருவத்தில் இறங்கி இந்தியா சாதனை படைக்கும் என உலக நாடுகள் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார். நிலவின் தென்துருவத்தில் முதலில் இறங்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளதாக கூறிய அவர், மற்ற நாடுகளையும் காட்டிலும் அரை நூற்றாண்டுகள் கொண்ட இந்திய விண்வெளித்துறைக்கு கிடைத்த பெருமை என குறிப்பிட்டார்.