தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியின் பெயரில் வெற்றி இடம் பெற்றிருந்த நிலையில், போரில் வெற்றி கண்டவர்கள் சூடும் வாகை மலரை கொடியின் நடுவில் இடம்பெறச் செய்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றுள்ள ரகசியத்தை சற்று விரிவாக பார்க்கலாம்.
சிவப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் பிளிரி எழும் இரண்டு போர் யானைகளுக்கு நடுவில் வாகை மலருடன் கூடிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார். கொடிக்கான விளக்கத்தை முதல் மாநில மாநாட்டில் அறிவிக்க இருப்பதாக விஜய் கூறியிருக்கும் நிலையில், கொடியின் வண்ணங்கள் குறித்தும் அதில் இடம்பெற்றுள்ள உருவங்கள் குறித்தும் வேறு விதமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.
பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுகவின் கொடியில் இடம்பெற்றிருக்கும் கறுப்பு நிறம் என்பது அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்வில் உள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்பதாகவும், அம்மூன்று துறைகளிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்கும் நோக்கில் சிவப்பு நிறமும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது.
அதிமுகவின் கருப்பு, சிவப்பு நிறத்தில் மத்தியில் வெள்ளை நிறத்தில் அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட கொடிக்கான காரணங்களை விளக்கவில்லை என்றாலும், பின்னாளில் கருப்பென்றும், சிவப்பென்றும் வேற்றுமையாய் கருதாமல் எல்லாரும் ஒற்றுமையாய் இருப்போம் என தமது திரைப்பட பாடல்கள் மூலம் எம்.ஜி.ஆர் விளக்கமளித்திருந்தார்.
இப்படி தமிழகத்தில் புதியதாக உதயமாகும் கட்சிகளின் கொடிக்கான காரணங்கள் பல இருக்கும் நிலையில். விஜய்யால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி குறித்தும், அதில் இடம்பெற்றுள்ள உருவங்கள் குறித்த ஆய்வுகளில் பலர் இறங்கியுள்ளனர்.
அதன்படி, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இரண்டாவது மிகப்பெரிய நாடாக கருதப்படும் ஸ்பெயின் நாட்டின் கொடியின் வண்ணங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஸ்பெயின் நாட்டின் பொருளாதார வளார்ச்சியை குறிக்கும் வகையில் அமைந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கொடியின் நடுவில் உள்ள மஞ்சள் நிறப்பட்டையில் இடம்பெற்றிருக்கும் இரண்டு போர் யானைகள் வெற்றிக் களிப்பில் பிளிரி எழுவது போன்ற படம், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முழக்கம் எனவும் விஜயின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போரில் வெற்ற மன்னர்கள் வாகைப் பூ சூடி வெற்றியை கொண்டாடுவது பண்டையகால வழக்கம். அந்த வழக்கத்தைப் பின்பற்றி போராக கருதப்படும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே கட்சிக் கொடியில் வாகை மலரை சூடியிருப்பது 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்பதை குறிக்கிறது என்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டுகின்றன.
ஏற்கனவே கட்சி பெயர் அறிவிப்பின் போது, தங்களது கட்சியை ஆங்கிலத்தில் சுருக்கமாக குறிப்பிடுவது போன்றே விஜய் கட்சியின் பெயரும் இருப்பதாக கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது கட்சி கொடியில் இடம்பெற்றிருக்கும் யானை உருவம், தங்களின் சின்னம் என தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
போர், வீரம், வெற்றியை குறிக்கும் விதமாக தனது கட்சியை வடிவமைத்திருக்கும் விஜய், தனது கட்சியை எப்படி வடிவமைக்க போகிறார் என்பதை பொறுத்தே அவரின் தேர்தல் வெற்றி அமையும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.